எப்படி ஒரு சிலரால் மட்டுமே எந்த காரணமும் இல்லாமல் சந்தோஷமாய் இருக்க முடிகிறது. மனதை லேசாகவே வைத்திருக்க முடிகிறது.
ஏன் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எது என்னை தடுக்கிறது.
எது என்னை சந்தோஷத்தை விட்டு தள்ளி நிற்க வைக்கிறது.
எவ்வளவோ வருடங்களாய் இதை ப்ரம்ம பிரயத்தனம் செய்கிறேன். முடியவில்லை.
இது நாள் வரை வீடு, வியாபாரம், குடும்பம், குழந்தைகள்... இப்போது பேரக்குழந்தையும் வந்துவிட்டது. இந்த கேள்விக்கு பதில் தேட என்னால் முடியவில்லை . நேரமும் இல்லை. என் கவனம் வேறு இடத்தில், என் மனம் வேறு இடத்தில், என் சிந்தனை வேறு இடத்தில்...
இப்போது lockdown சமயம். திடீரென்று எல்லாம் ஒரு தெளிவில்லாத நிலைக்கு வந்து விட்டது.
முதல் 10 நாட்கள் பயம் மட்டுமே வியாபித்திருந்தது. பிரச்சனை அதிகரித்தது. வீட்டு வேலையும் சமையலும் செய்து என் சிந்தனை சிதறல்களை திசை திருப்ப ஆரம்பித்தேன்.
அடுத்த 15 நாட்கள் - பயம் போய் பாதை என்னவென்று யோசிக்க வைத்தது. சற்றே விவேகம் வந்தது. இத்தனை வருடங்கள் செய்யாத, செய்ய மறந்த அத்தனையும் பட்டியல் போட ஆரம்பித்தேன். பாட்டு கேட்டேன், படிக்க முனைந்தேன். சித்திரம் வரைந்தேன், youtube சமையல் கற்றுக்கொண்டேன். எவ்விதம் நான் இந்த சூழலை என் வியாபாரத்திற்கு சாதகமாய் மாற்றிக்கொள்வேன் என்று யோசிக்க முனைந்தேன். இப்போது 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மனதிற்குள் லேசாய் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. பயம் விடத்தொடங்கியிருக்கிறது. புத்திக்கு நிறைய வேலை கொடுக்க ஆரம்பித்தேன். தள்ளி நின்று யோசித்தேன். என்னுள்ளே ஆழமாய் சென்று, என்னை நானே புரிந்து கொள்ள முனைந்தேன். இதை செய்ய நேர்ந்த போது தான் இந்தக் கேள்வி என்னுள்ளே வந்தது. சில பேர் மட்டும் எப்படி எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.
புரிய ஆரம்பித்தது.
- அவர்கள் அந்தக்ஷணத்தில் வாழ்பவர்கள்
- அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷம் கொள்பவர்கள்
- அவர்கள் அந்நியரை பார்த்தால் சிரித்து ஹலோ சொல்பவர்கள்
- அவர்கள் குறைகளை பெரிதாய் பாராட்டுவதில்லை
- அவர்கள் தேடல் - உள் நோக்கி நகர்கிறது
- அவர்கள் பார்வை - பிரபஞ்சம் தாண்டி விரிந்து கிடக்கிறது
- அவர்களுக்கு பேதங்கள் கிடையாது
கட்டுப்பாடு கிடையாது, கடிவாளமும் கிடையாது
- அவர்கள் காற்றை போல, பூவுக்குள் ஒளிந்திருக்கும் தேன் போல
- அவர்கள் காலம் நேரம் கடந்தவர்கள்
- அவர்கள் சந்தோஷமாய் இருப்பவர்கள்
- அந்த சந்தோஷத்தை பிறர் மேல் வைரஸ் போல பரப்புபவர்கள்.
ஆஹா !!! புரிந்து விட்டது.
இன்று இந்த நொடியில் நான் வாழ்ந்தால்,
என்னை என்னுள் உணர்ந்தால்,
என்னிடம் ஏதுமில்லை,
என்னால் ஆவது ஒன்றுமில்லை என நினைத்தால்
இதுவும் கடந்து போகும் என புரிந்தால்
நானும் சந்தோஷமாய் இருக்க முடியும்.
அட!!! இவ்வளவுதானா ???
Congratulations for the maiden blog.... ஆரம்பமே அசத்தலா இருக்கு....looking forward to more such ...